தமிழகம் உள்பட நாடு முழுவதும் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், இதுவரை 80 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மத்திய அரசால் “சுகன்யா சம்ரித்தி யோஜனா’ என்ற சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்த திட்டம் அஞ்சல் துறை வாயிலாக “செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னை நகர அஞ்சல் துறை மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்தாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை, தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.2,900 கோடிக்கு முதலீடு: நாடு முழுவதும் உள்ள செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் வாயிலாக, ஏறத்தாழ ரூ.2,900 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேபோல, நாடு முழுவதும் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கையும் 30.86 கோடியிலிருந்து 33.60 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அஞ்சல் சேமிப்புக் கணக்குகள், பணச் சான்றிதழ்கள் வாயிலாக ரூ.6.5 லட்சம் கோடி அளவுக்கு மொத்த வைப்பு நிதி பெறப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
English Summary: In the same year, 80 million savings accounts in Selvamakal savings plan. Postal information.