தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் 4 பாடப்பிரிவுகளில் இடங்களுக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 6 பாடப்பிரிவுகளில் இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிவில் பாடப்பிரிவில் 1,110 இடங்களும், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 1,836 இடங்களும், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 360 இடங்களும், இ.சி.இ. பாடப்பிரிவில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 1,800 இடங்கள், ஐ.டி. பிரிவில் 2,280 இடங்கள், ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் 2,520 இடங்கள், சைபர் செக்யூரிட்டி பிரிவில் 1,200 இடங்கள், ஏ.ஐ. மிஷின் லேர்னிங் பிரிவில் 690 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 4 பாடப்பிரிவுகளில் 3,696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.