இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்கள் வராமல் தடுப்பதற்கு மத்திய அரசின் ‘இந்திர தனுஷ் என்ற திட்டத்தின்படி தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்டமாக சென்னை உள்பட மேலும் 7 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. மேலும் நீலகிரி, கள்ளக்குறிச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசின் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாமை அடுத்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் என்றும் முகாம் நடைபெறும் மாவட்டங்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.