தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு மற்றும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதி தமிழகத்தின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் அறிமுகமாக உள்ளது.
ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் முதல் முறையாக மத்திய சென்னை தொகுதியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது முதன்முதலாக சட்டமன்ற தேர்தலிலும் அறிமுகமாகவுள்ளது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘ஒரு வாக்காளர் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பி அவர் சார்ந்த சின்னத்துக்கு நேரே உள்ள பொத்தானை அழுத்தும் போது பீப் என்ற ஒலி எழுப்பும். அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரத்தில் அந்தச் சின்னம் அச்சிடப்பட்டு அதன் உள்ளேயே இருக்கும். அந்த சின்னம் அச்சிடப்பட்ட தாளினை இயந்திரத்தில் உள்ள சிறிய வகை கண்ணாடியின் வழியாகக் காணலாம். அச்சிடப்பட்ட சீட்டு உள்ளேயேதான் இருக்கும். அதை தனியாக வெளியே எடுக்க முடியாது. இதுதான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இயந்திரம். இந்தப் புதிய வகை இயந்திரத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து தேர்தல் பணி செய்யும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
தமிழகத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் தொகுதிகளில் ஒன்றாகிய தூத்துக்குடியின் மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் இதுகுறித்து கூறும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்துக்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 3,050 வாக்களிக்கும் அலகுகள், 3,530 கட்டுப்பாட்டு அலகுகள் வந்துள்ளன. அவை புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை ஆய்வு பணிகள் வரும் 17, 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறவு ள்ளன. இதற்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து 4 பொறியாளர்கள் வரவுள்ளனர்’ என்று கூறினார்.
English Summary: Information to whom we vote facilities are now available at 17 constituencies.