உலக தொழிலதிபர்களிடம் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீட்டை உருவாக்க கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு முதலீடுகள் குவிந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில்களை தொடங்க போட்டி போட்டு கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள 7 முன்னணி நிறுவனங்கள் மட்டுமே சுமார் ரூ.51 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்கின்றனர். இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
1. அதானி நிறுவனம் சூரியமின்சாரம் தயாரிப்பு, துறைமுகம் மற்றும் அடிப்படை கட்டுமான வசதிக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
2. சன்எடிசன் என்ற நிறுவனம் சூரியசக்தி மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
3. HCL என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.6,600 கோடி முதலீடு செய்யும் என்றும் அதன் தலைவர் சிவ்நாடார் அறிவித்துள்ளார். இந்த நிறுவனம் மதுரை மற்றும் திருநெல்வேலியில் தொழில்கள் தொடங்க போவதாக அறிவித்து உள்ளது.
4. எம்.ஆர்.எப். டயர் நிறுவன அதிபர் கே.எப்.மேமன் அடுத்த 5 ஆண்டில் ரூ.4,500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
5. மகேந்திரா மோட்டார் நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடியும், மகேந்திரா ஆய்வு நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளது.
6. டெல்டா இந்தியா எலக்ட்ரானிக் நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், இதற்காக ஓசூரில் பெரிய தொழில் கூடத்தை அமைக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
7. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சுந்தரம் கிளைடன் நிறுவனம் ஓசூரில் ரூ.800 கோடி முதலீடு செய்கின்றன.
மேற்கண்ட 7 நிறுவனங்கள் செய்யும் முதலீடு மட்டுமே 51 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டுகிறது. அதுமட்டுமின்றி வேதாந்தா நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடியில் 2 தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யப் போவதாக அதன் தலைவர் நிர்வாக அதிகாரி ராம்நாத் கூறி இருக்கிறார். தூத்துக்குடியில் உள்ள தாமிர தொழிற்சாலை, மேட்டூரில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும் விரிவாக்கம் செய்ய இந்த முதலீடுகளை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சூரிய சக்தி திட்டங்களிலும் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
ஐ.டி.சி. நிறுவனம் தமிழ் நாட்டில் ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும், புதிய தொழில்களை தொடங்கவும் ரூ.2.500 கோடி முதலீடு செய்கிறது. ரீஜென் பவர் டெக் நிறுவனம் மின்உற்பத்தி துறையில் பெரிய அளவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. எஸ்பேங்க் ரூ.125 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், தனது மேலாண்மை கூடத்தை தமிழ் நாட்டில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். யமாகா மோட்டார் நிறுவனம் தனது 3வது தொழிற்கூடத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இதை முதலமைச்சர் ஜெயலலிதா மாநாட்டில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரூ.1,500 கோடி முதலீடு வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த வெஸ்ட் மினிஸ்டர் ஹெல்த் கேர் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது பரிசோதனை மையத்தை சென்னையில் அமைக்க போவதாக அறிவித்து உள்ளது. மேலும் இங்கிலாந்தை சேர்ந்த ஹெல்த் அலையன்ஸ், அப்பல்லோ மெட்கில்ஸ் ஆகிய நிறுவனங்களும் தொழில் தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளன. அதேபோல பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சப்ரான் நிறுவனமும் தொழில்களை தொடங்குகிறது. ஜப்பான் பொருளாதார துறை, தெற்கு ஆசிய அமைப்பின் டைரக்டர் ஜெனரல் செய்ஜி தகாகி கூறும்போது, இந்த மாநாடு காரணமாக ஜப்பான் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்ய வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
English Summary : List of Investors in Global Investors meet conducted in Chennai.