புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை கவர்னராக இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கிரண் பேடி 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக-வில் சேர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் விடுவிக்கப்பட்டு புதிய கவர்னராக கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளது புதுச்சேரியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English summary : IPS Kiran Bedi as the new Governor of Pondicherry. Appointment