தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவில் வாக்களிக்கும் நடைமுறை ஏற்கனவே இருந்தாலும், முன் எப்போது இல்லாத அளவு இந்த முறை நோட்டா குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு இருந்து வருகிறது. ஆனாலும் நோட்டா வெற்றி பெறும் தொகுதியில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், நோட்டாவுக்கு பின் அடுத்துள்ள வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் விளக்கம் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில், தரங்கம்பாடி துரைவாசு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் ஓட்டு போட விரும்பாத வாக்காளர்கள், ‘மேற்குறிப்பிட்டவர்களில் எவருமில்லை’ (நோட்டா) என்று வாக்களிக்க ஜனநாயக உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒரு தொகுதியில் எத்தனை ‘நோட்டா’ ஓட்டு பதிவாகியுள்ளது என்று கருத்தில் கொள்வதில்லை. அதிகமான ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு விடுகிறார். ஒருவேளை, வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட, ‘நோட்டா’ ஓட்டு அதிகமாக இருந்தால், அவை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வெற்றியை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எனவே, ஒரு தொகுதியில் அதிகமாக நோட்டா ஓட்டு பதிவானால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கவேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனுவை கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுப்பினேன்.
அதேபோல, அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் ஓட்டு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதுபோல, வீடுகளில் படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், நோய் வாய்பட்டவர்கள் ஆகியோரும் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் விதமாக தபால் மூலம் ஓட்டு போடும் முறையை கொண்டு வரவேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தேன்.
என் மனுவை பரிசீலிப்பதாக பதில் கடிதம் வந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விடுமுறைக்கால நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் நேற்று விசாரணை செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘நோட்டாவுக்கு அதிக வாக்கு விழுந்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க முடியாது. யார் அதிக வாக்கு பெற்றவரோ, அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்’ என்று கூறினார்.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, வாக்காளர்களுக்கு இந்த ‘நோட்டா’ உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை, தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
நோட்டா ஓட்டு அதிகமாக விழுந்தாலும், அதிக ஓட்டு பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும்போது, அதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நோட்டா முறை அறிமுகமாவதற்கு முன்பு இருந்த அதே நிலையே நீடித்தால், நோட்டா என்ற முறை வந்ததால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது? எனவே, மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்த ஐகோர்ட்டு விரிவாக பரிசீலிக்க வேண்டியதுள்ளது. அதனால், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
English Summary : Madras high court order for the election if NOTA wins.