தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த முறை 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் பொதுமக்களிடமும் இம்முறை வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் திங்கட்கிழமை வருவதால் சனிக்கிழமையே வெளியூரில் இருந்து சென்னையில் வந்துள்ள அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாக்களிப்பதற்காக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கூட்டநெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் விதமாக சிறப்பு பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவிக்காமல் குடும்பத்துடன் வசதியாக பயணம் செய்ய முடியும்.

தேர்தல் நடைபெறும் நாள் திங்கட்கிழமை என்பதால், அதற்கு முந்தைய இருநாட்களும் வாரவிடுமுறை என்பதால் சென்னையில் வசிப்பவர்களில் ஏராளமானோர் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள். தொலைதூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் 13 மற்றும் 14-ந் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவுமுடிவடைந்துவிட்டது.

இதையொட்டி ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் ஆகிய கோட்டங்களில் இருந்தும் தேவைக்கேற்ப 300 முதல் 400 சிறப்புப் பஸ்கள் தலைநகரான சென்னைக்கும், மற்ற நகரங்களுக்கும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இம்முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Special buses are organized for public to travel to their hometown for election.