தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நாளன்று அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடியில் காண்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக புகைப்படம் உள்ள கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிருபிக்க பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்களிக்க தேவையான ஆவணங்களின் விபரங்கள் பின்வருமாறு:-

1.பாஸ்போர்ட்,
2.ஓட்டுனர் உரிமம்,
3.மத்திய மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள்
4. வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள்
5. பான்கார்டு,
6. என்.டி.ஆர். கீழ் ஆர்.ஜி.ஐ. அளிக்கப்பட்ட ஸ்மார்டு கார்டு
7. மகாத்மா காந்தி ஊரக வேலை பணிநிலை அட்டை
8. தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
9. புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம்
10. தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு
11. பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை, உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள்

மேற்கண்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.

வாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்தர் பிழைகள், எழுத்துப்பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் வாக்களிக்க வரும் போது வாக்குச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும் பட்சத்தில் அவ்வகையான புகைப்பட வாக்காளர் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

புகைப்பட ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிருபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப்படி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர். வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English Summary : Required documents to vote for those who don’t have voter id.