சென்னை: தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ.1) முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, திருவாரூர், தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், நாகை, கடலூர் மாவட்டங்களிலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், வடபழனி, தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர், ஆவடி, அம்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டுகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இதேபோன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகை மாவட்டம் சீர்காழி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை 5.30 மணி வரை மிக அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழலில் 10.மி.மீ., கடலூர் – 8.4 மி.மீ. மழையும் பதிவானது. மாதவரம் – 7.1 மி.மீ., தரமணி – 6 மி.மீ., எண்ணூர் – 4.9 மி.மீ., கிண்டி – 3.8 மி.மீ.மழையும் பதிவானது.