சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் சென்னை நகருக்கு குடிநீர் அளிக்கும் அனைத்து ஏரிகளும் நிறைந்துள்ளதால் சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மிகவும் குறைவான அளவே மழை பெய்ததால் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது. எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கல் நிலவரம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை நகருக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட 2004-ஆம் ஆண்டில் என்னால் கொண்டுவரப்பட்ட புதிய வீராணம் குடிநீர் திட்டத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் சென்னை நகருக்கு விநியோக்கப்படுகிறது. அது போலவே, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் திட்டம் மற்றும் அரசால் 2013-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட நெம்மேலி குடிநீர் திட்டம் ஆகியவற்றால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு பெறப்படுகிறது. மேலும், முழு அளவு தண்ணீர் வழங்கப்படாததால் நீரின் அழுத்தம் குறைவு காரணமாக குழாய்களில் குடிநீர் பெற இயலாத இடங்களில், 8,500 குடிநீர் தொட்டிகள் அமைத்தும், 6,000 லாரி நடைகள் மூலமூம் குடிநீர் வழங்கப்படுகிறது. 5,000 கைபம்புகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப் பயன்படும் ஏரிகளில் தற்போதைய பெருமழைக்கு முன்னர் வரை போதிய தண்ணீர் இல்லாததால், சென்னைக்கு நாளொன்றுக்கு 535 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய வடகிழக்கு பருவமழையின் காரணமாக 9,053 மில்லியன் கனஅடி நீர், சென்னை குடிநீருக்கு பயன்படும் ஏரிகளில் இருப்பில் உள்ளது. தற்போது ஏரிகளில் உள்ள நீர் இருப்பு; இரண்டு கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையங்கள் மூலமாக பெறப்படும் நீர்; புதிய வீராணம் திட்டத்தின் மூலம்
கிடைக்கப்பெறும் நீர் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இதன் காரணமாக சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீர் நாள்தோறும் வழங்கப்படும். மேலும், ஆவடி, அம்பத்தூர் மற்றும் உள்ளகரம் – புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகள் முடிவுடைந்துள்ளதால் தற்போது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க இயலும். எனவே இந்த பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன்”
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.English summary-CM Jayalalithaa orders distribution of 830 million litres of water every day for Chennai