தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க செய்த முடிவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து விரிவில் முடிவு எடுக்க வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்பட பல நிர்வாகிகள் கெடு விதித்தனர். எனவே தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அத்தனை நிர்வாகிகளையும் கட்சியிலிருந்து நீக்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகம், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம்(ஆஊ) (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Key Executives were removed from DMDK. DMDK’s Head Vijaykanth announced New Executives for the Party.