திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பௌர்ணமிகளில் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி இன்று இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். தொடர்ந்து, இன்றும் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை தரிசிக்க கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.