Inside_madras_law_college_old_building,_Sep_2013எல்.எல்.பி. எனப்படும் மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக்கு அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2015-16 கல்வி ஆண்டிற்கான இளநிலை சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வயது உச்ச வரம்பு சர்ச்சை காரணமாக, மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு ஹானர்ஸ் (எல்.எல்.பி.) சட்டப் படிப்புக்கான சேர்க்கையை முதல் கட்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாவிட்டாலும், தகுதியுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த இரு தினங்களில் இந்தப் பணிகள் நிறைவுபெற்றுவிடும். அதன் பிறகு, இந்தப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி நிர்ணயம் செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று கூறினார்.

English Summary:LLP honor Course Counselling on Sep-7th.