பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வரும் நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 6 நாள்களே உள்ளது. பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பொறியியல் படிப்பிற்கு நேற்று மாலை வரை 35 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் பிற மையங்களில் மே 27-ஆம் தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரையிலும் விநியோகிக்கப்பட உள்ளன.
இதன்படி, விண்ணப்ப விநியோகம் இன்னும் 6 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று முன் தினம் மாலை வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 831 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. இருப்பினும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வெறும் 35 ஆயிரம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் மீதியுள்ள ஒன்றரை லட்ச விண்ணப்பங்கள் வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடைசி நேர நெரிசலை தவிர்க்க மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary : May 29 is the last date to submit B.E. applications for students who finished +2.