தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் முடிவடைந்து பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,383 இடங்கள், 6 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள், 17 சுயநிதிக் பல் மருத்துவக் கல்லூரிகளில் 970 இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு சென்னையில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது.
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களில் 78 இடங்கள் நிரம்பி மீதம் 7 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொருத்தவரை, 72 எம்.பி.பி.எஸ். இடங்களும், 970 பல் மருத்துவ இடங்களும் மீதம் உள்ளன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வை ஜூலை 18-ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் தேசிய தகுதிகாண் தேர்வு (என்இஇடி) ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும். அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சுகாதாரத் துறையின் http://www.tnhealth.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : MBBS.,The 2nd phase of the study when counseling? Announcement of Medical Education selector