சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
சென்னையில் தற்போது சுமார் 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், விமான நிலையம் போன்ற முக்கிய பகுதிகள் இதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், தினமும் பயணம் செய்யும் பயணி களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அடுத்தகட்டமாக அண்ணா சாலை டிஎம்எஸ், சென்ட்ரல் வழி யாக வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக் கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி யுள்ளன. ஏற்கெனவே, சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தில் டீசல் ரயில் இன்ஜின் இயக்கி ஆய்வு நடத்தப் பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, “டிஎம்எஸ் பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை யில் 9.5 கிமீ தூரம் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில்சேவை தொடங்கவுள்ளோம்.
டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மின்தடங்கள் அமைத் தல், சிக்னல் அமைத்தல் உள் ளிட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த மாதம் இறுதியில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும். சுமார் 45 நாட் களுக்கு தொடர்ந்து மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் வந்து ஆய்வு நடத்தி, மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளிப்பார். டிசம்பர் மாதம் இறுதிக்குள் தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்குவோம்” என்றனர்.