metro_train_0205சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விரைவில் இந்த பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பாதையில் முதல் கட்டமாக 14 மெட்ரோ ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

13 கி.மீ தூரமான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையில் மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரேசில் நாட்டைச் சேர்ந்த அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் 9 ரயில்களும், ஆந்திர மாநிலம் தடாவில் 33 ரயில்களும் தயாரிக்கபட்டு அவை அனைத்தும் கப்பல் மூலம் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில் கோயம்பேடு, புறநகர் பஸ் நிலையம் (சி.எம்.பி.டி) அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பரங்கி மலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும் பயணிகளின் இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக லிப்ட், நகரும் படிக்கட்டு மற்றும் சாதாரண படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் மூலமும், இயந்திரம் மூலமும் பயணிகளுக்கு பயண டிக்கெட் வழங்கப்படும். பயணம் செய்யும் இடத்தை இயந்திரத்தில் பதிவு செய்து ஸ்மார்ட் கார்டை சொருகினால் டிக்கெட் கையில் கிடைக்கும். பயணிகள் ஸ்கேன் கருவி மூலம்  பரிசோதிக்கப்படுவார்கள். அவர்கள் கொண்டு செல்லும் உடமைகள் அனைத்தும் பயணத்திற்கு முன்னதாக பரிசோதிக்கப்படும். மெட்டல் டிடெக்டர் கருவியும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.