பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு இன்று வருகை தருகிறார். இன்று சென்னையில் நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் தேசிய கைத்தறி தின அறிவிப்பு விழாவும் கைத்தறிக் கண்காட்சியும் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பிரதமரான பிறகு, அவர் சென்னைக்கு வருவது இதுவே முதல்முறை. ஏற்கெனவே ஒருமுறை சென்னைக்கு வந்தபோதிலும், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஸ்ரீஹரிகோட்டா சென்றுவிட்டார். நகருக்குள் அவர் வரவில்லை.
இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் சென்னை பல்கலைக்கழக வளாகம், பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பிரதமர் செல்லும் பாதையில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் இன்று ஒருநாள் நிறுத்திவைக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையம் ,சென்னை பல்கலைக்கழக வளாகங்களில் மத்திய மற்றும் மாநில போலீசார் பல அடுக்குகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பகுதிகளில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. விமான நிலையம் முதல் பல்கலைக்கழக வளாகம் வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மது ஒழிப்பு போராட்டங்கள் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Modi first visit to Chennai today on the occasion of the handloom sector.