இந்திய அஞ்சல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தி.நகரில் ஏ.டி.எம் மையம் ஒன்றை தொடங்கி சேவை செய்து வருகிறது. இந்த ஏ.டி.எம் மையம் சென்னையில் இன்னும் விரிவுபடுத்தப்படும் என ஏற்கனவே அஞ்சல் துறை அறிவித்திருந்த நிலையில் நேற்று பரங்கிமலை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சலகங்களிலும் அஞ்சலக ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அஞ்சலகங்களில் சிபிஎஸ் (Core Banking Solutions) திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்த இடத்திலும் அஞ்சலக ஏடிஎம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் இந்த ஏடிஎம் மையம் ஏற்கெனவே இயங்கி வருகிறது. பரங்கிமலை, மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையங்களில் இப்போது புதிதாக ஏடிஎம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்தபடியாக, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் இன்னும் 2 நாட்களில் அஞ்சலக ஏடிஎம்கள் திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.