தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், 3-வது நாளாக நேற்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி விரைவு ரயில்நேற்று முதல் வழக்கமாக இயக்கப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.
இதனால், திருநெல்வேலி – திருச்செந்தூர் உள்ளிட்ட சில முக்கிய வழித்தடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால், ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள இடங்களில், ரயில் பாதை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், 3-வது நாளாக நேற்றும் 30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
திருச்செந்தூர் – திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி – திருச்செந்தூர், திருநெல்வேலி – செங்கோட்டை, திருநெல்வேலி – நாகர்கோவில், வாஞ்சிமணியாச்ச – தூத்துக்குடி, தூத்துக்குடி – திருநெல்வேலி உட்பட 30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
அதேநேரத்தில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி விரைவு ரயில் நேற்று முதல் வழக்கமாக இயக்கப்பட்டது. மழை முடிந்து, பல்வேறு இடங்களில் நீர் அகற்றப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்த இரண்டு நாட்களில் வழக்கமாக ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.