தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் தற்போது இயங்கிவருகிறது. இங்கு 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு அசெளகரியம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, சட்டப்பல்கலைகழக மாணவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை அடுத்து தரமணி ரயில் நிலையம் அருகே சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நிர்வாக கட்டிடம், நூலக கட்டிடம், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான வகுப்பறைகள் அடங்கிய கட்டிடங்கள், மாணவ மாணவியர் விடுதிகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான பல்கலைக்கழக வளாகம் அமைக்க ரூ.59 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர் ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தரமணியில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தற்போது தயார் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை பல்கலைக்கழக அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். புதிய கட்டிடத்துக்கு மாறிய பிறகு, பழைய வளாகம் பல்கலைக்கழகத்தின் வேறு சில பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு சட்டக் கல்லூரிகள், 1 தனியார் சுயநிதி சட்டக் கல்லூரி இயங்குகின்றன. மேலும், சீர்மிகு சட்டப் பள்ளி மூலம் இளநிலை, முதுநிலை ஹானர்ஸ் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
English Summary : New building for Taramani Dr.Ambedkar Law University to be build.