சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நுங்கம்பாக்கத்தை அண்ணா சாலையுடன் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 290.99 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. அண்ணா சாலையையும் மகாலிங்கபுரத்தையும் உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் இரண்டு கட்டங்களாக பாலம் அமைக்கப்படும். முதல் கட்டமாக தென்மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து கோவிந்தன் தெரு வரை தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கப்படும். இரண்டாம் கட்டமாக கோவிந்தன் தெருவில் இருந்து ஹபிபுல்லா சாலை வரை பாலம் கட்டப்படும். இவை பாதசாரிகள் சுரங்கப் பாதையுடன் கூடியதாக அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணிக்கு ரூ. 245.03 கோடியும், இரண்டாம் கட்டப் பணிக்கு ரூ. 45.96 கோடியும் என மொத்தம் ரூ. 290.99 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ÷இந்தத் தொகையைப் பெற நிதி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்படும். மேலும், இந்த மதிப்பீட்டுக்கு ஆட்சிமுறை ஒப்பளிப்பு கோரி அரசுக்குக் கடிதம் எழுதவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்ட ரூ. 9.99 கோடி ஆகும் என்ற மதிப்பீட்டுக்கு அனுமதியளித்தும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. உயர்நீதிமன்ற வழக்கில் இருந்த, திருவான்மியூர் 4-ஆவது சீவார்டு சாலையில் உள்ள சுடுகாடு, அஷ்டலட்சுமி கோயில் அருகே உள்ள சுடுகாடு, திருவள்ளுவர் நகர் பூங்கா அருகே உள்ள ஆதிதிராவிடர் சுடுகாடு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
4. மேலும், 4, 5, 9, 10 ஆகிய மண்டலங்களில் மொத்தம் ரூ. 21.27 கோடியில் எல்.இ.டி. விளக்குகள் அமைப்பது, புதிய பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
5. மேலும் கூவம் சீரமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது, உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, விதி எண் 110-ன் கீழ் பல்வேறு திட்டங்களை வழங்கியது ஆகியவற்றுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமன்றக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
English Summary : New flyover from Nungambakkam to Annasaalai decided by Chennai corporations.