கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திரை வைத்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.. அப்போது, நீதிபதிகளையும் விமர்சனம் செய்ததாகவும், நீதிபதியின் ஹெல்மெட் உத்தரவுக்கு எதிராக 12 தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் தகவல்கள் வந்தன. அதனால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு, மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தர்மராஜ், தலைவர் என்ற பொறுப்பில் தீர்மானங்களில் கையெழுத்திட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவற்றை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழ்வாணன், “மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், செயலாளரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் பரிசீலிக்கப்படும். இல்லாவிட்டால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பேரமர்வு விசாரணைக்கு மாற்றலாம்” என்று பரிந்துரை செய்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று கூறினார்.

இந்த விசாரணை அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரிய திரையின் மூலம் பார்த்தனர். நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது நேற்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Live trail was broadcast form Madras High court for the first time.