தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, அரசு விழாவாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் தொடங்கி தமிழகத்தின் 31 மாவட்டங்களில் நடந்து முடிந்தது.
நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதனுடன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ததன் பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
மாலை 4 மணி அளவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்கியது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த விழா மூலம் ஏராளமான அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுக மீது குறை கூற முடியாத விரக்தியில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.