ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவும் வகையில் நமக்கு தேவையான ரயில், தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் அப்ளிகேஷன் ஒன்றை மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையில் பொறியியல் (Electronics and Communication Engineering) இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் அருண் பிரசாத், தங்கராஜ், பாலமுருகன், சதீஷ் ஆகியோர் இணைந்து ‘ரயில் லொகேஷன் டிடெக்டர்’ என்ற அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது எந்த ரயில் எந்த இடத்தில் உள்ளது, எப்போது குறிப்பிட்ட இடத்துக்கு அந்த ரயில் வரும் போன்ற தகவல்களை, ரயில்வே நிர்வாகம் மட்டுமே பயணிகளுக்கு கொடுத்து வருகிறது. ஆனால் ‘ரயில் லொகேஷன் டிடெக்டர்’ என்ற இந்த அப்ளிகேஷன் மூலம் எந்த ரயில் எங்கே இருக்கிறது, எத்தனை மணிக்கு ரயில் நிலையத்தை வந்தடையும் போன்ற தகவல்களை நமது ஆண்ட்ராய்டு செல்போன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

ஜிபிஎஸ், ஜிஎஸ்எம், ஜிபிஆர்எஸ் கருவி, பேட்டரி ஆகியவற்றைக் கொண்டு ‘ராஸ்பெர்ரி-பை’ என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி சிறிய அளவிலான சிபியு போன்றது. இந்தக் கருவியை ரயிலில் ஏதேனும் ஒரு பகுதியில் அமைத்துவிட்டால், இந்த கருவியில் உள்ள ஜிபிஎஸ் கருவியானது, சாட்டிலைட் உதவியுடன் ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை ஜிஎஸ்எம் மற்றும் ஜிபிஆர்எஸ் வழியாக ‘ராஸ்பெர்ரி-பை’க்கு அனுப்பிவிடும். ‘ராஸ்பெர்ரி-பை’ கருவி இந்தத் தகவலை சர்வருக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து ரயில் எங்கே இருக்கிறது, எத்தனை மணிக்கு ரயில் நிலையத்தை வந்தடையும் போன்ற தகவல்களை ஆண்ட்ராய்டு ஆப்-களுக்கு கூகுள் மேப்ஸ் மூலம் துல்லியமாகத் தெரிவித்துவிடும். ரயில் தாமதம் மற்றும் எங்கேனும் நின்றுவிட்டால் அதையும் நாம் கண்டுபிடித்து விடலாம்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து துணைப் பேராசிரியர் ராஜபார்த்திபன் கூறும்போது, “ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ, புயல் மழை, மலைச் சரிவு, பனிச் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின்போது ஓடிச் சென்று உதவவும் இந்தக் கருவி நிச்சயம் பயன்படும். இந்த கருவிக்கான காப்புரிமையைப் பெற மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரயில்கள் மட்டுமின்றி இந்த கருவியை கப்பல் மற்றும் கார்களிலும் பொருத்தி பயன்படுத்த முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்பை கல்லூரியின் சார்பில் CPRI, BANGALORE-க்கு சோதனைக்காக அனுப்ப உள்ளதாக கல்லூரி முதல்வர் செந்தில் கூறினார்.

English Summary: New Mobile Application Developed for Trains to track Locations. Trains Locations can be find using this Application.