சென்னையில் ரூ.367.85 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-1 ஆகியவற்றின் கீழ் சாலைகளை புதிதாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ரூ.291.29கோடியில் 3,108 உட்புறச் சாலைகள், ரூ.76.56 கோடியில் 87பேருந்து தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக ரூ.18 கோடியில் 28 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, அதில் ரூ.8.39 கோடிமதிப்பிலான 15 சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.6.13 கோடியில் 7 சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 6 சாலைகள் ரூ.3.47 கோடியில் அமைக்கப்படவுள்ளன.
அதேபோல், ரூ.89.07 கோடியில் 997 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, அதில் ரூ.26.85 கோடி மதிப்பிலான 296 உட்புறச் சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தொடர்ந்து தற்போது ரூ.35.79 கோடியில் 414 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 287 உட்புறச் சாலைகள் ரூ.26.43கோடியில் அமைக்கப்படும்.
மேலும், ரூ.41.11 கோடியில் 414 உட்புறச் சாலைகள், ரூ.31.33 கோடியில் 30 பேருந்து தடசாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். இதுதவிர, ரூ.161.11 கோடியில் 1697உட்புறச் சாலைகள், ரூ.27.23 கோடியில் 29 பேருந்து தடசாலைகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.