செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகள் திடீரென எதிர்பாராத காரணத்தில் கட் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்புக்கு 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது.
செல்போன் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை டிராய் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதில், செல்போனில் அழைப்புகள் திடீரென பாதியில் கட் ஆனால் வாடிக்கையாளருக்கு ஒரு அழைப்புக்கு ரூ1 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த அழைப்பு கட் ஆனது மற்றும் இழப்பீடு குறித்த எஸ்.எம்.எஸ்.ஐ வாடிக்கையாளருக்கு 4 மணிநேரத்துக்குள் செல்போன் நிறுவனங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இதுவே போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த இழப்பீடு அவர்களுடைய கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
டிராய் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து செல்போன் நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தன. ஆனால் செல்போன் நிறுவனங்கள் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் செல்போன் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டிராயின் உத்தரவு சட்டவிரோதமானது என கூறி இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக செல்போன் நிறுவனங்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூறுகையில், டிராய் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
English Summary : No compensation for call disconnection, Supreme court order.