ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த பொறியாளர் சரண்யா அரி, தேசிய அளவில் 7-வது இடத்தையும், புதுச்சேரி டாக்டர் வைத்தியநாதன் 37-வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான மத்திய அரசு உயர் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளை கொண்ட இந்த தேர்வை யுபிஎஸ்சி என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கான 1,129 காலியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வின் மெயின் தேர்வு டிசம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 855 பேர் கலந்துகொண்டனர். இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 2,600 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற நிலையில் நேர்முகத் தேர்வு கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடந்தது.

இந்த நிலையில், சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று மாலை 4.45 மணி அளவில் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 1,078 பேர் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் டெல்லி மாணவி தீனா டாபி முதலிடத்தையும், காஷ்மீர் மாணவர் சபி கான் 2ஆம் இடத்தையும், டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி ஜஸ்மீத் சிங் சாந்து 3அம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த பொறியாளர் சரண்யா அரி அகில இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் வைத்தியநாதன் 37-வது இடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் சென்னை ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சரண்யா அரி, பி.டெக் பட்டதாரி. எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முன்னாள் மாணவியான அவர் தனது வெற்றி குறித்து கூறும்போது, ‘‘நான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது முழுக்க முழுக்க என் பெற்றோரின் கனவு. அவர்களது கனவை நனவாக்கியுள்ளேன். மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்காக உழைப்பேன்’’ என்று கூறினார். புதுச்சேரி டாக்டர் வைத்திய நாதன், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த சிபி ஆதித்ய செந்தில்குமார் (72-வது ரேங்க்), தஞ்சாவூரை சேர்ந்த இளம்பகவத் (117-வது ரேங்க்), ஈரோடு சரவணன் (344), சதீஷ் குமார் (607), பாலுமகேந்திரா (730) உள்பட 80-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஐஆர்எஸ் அதிகாரியாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இளம்பகவத், சரவணன் உள்ளிட்டோர் தமிழ்வழியில் தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : IAS result announced. Chennai girl gets 7th place.