ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் தேதி ‘உலக புத்தக தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியின் கோவை மண்டல இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி தமிழில் மொழிபெயர்த்துள்ள மகாத்மா காந்தியின் “சத்திய சோதனை’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். .
இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
முன்பு ஒரு காலத்தில் காந்தியை விமர்சனம் செய்த கூட்டத்தின் மத்தியில் இருந்த நான், பின்னாளில் காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன். காந்தியை அறிந்து கொள்ள எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. அகிம்சையை பின்பற்றுவது என்பது வீரம் ஆகும். அதை யாராலும் எளிதாகப் பின்பற்ற முடியாது.
ஆனால், முயற்சி செய்தால் அகிம்சை கொள்கையைப் பின்பற்ற முடியும். காந்தி ஒரு தலைவனாக இல்லாமல் தொண்டனாக இருந்து பணியாற்றியதால்தான் உச்சத்தை அடைய முடிந்தது. மகாத்மா காந்தி ஒரு நாட்டின் தலைவராக இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் குடிமகனாகவும் திகழ்கிறார். அவரது புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடுவதும், அதைப் படிப்பதும் தேசத்துக்குச் செய்யும் சேவை ஆகும். ‘ஹேராம்’ திரைப்படத்தை தயாரிக்கும் போதுதான் காந்தி குறித்து பல அரிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
காந்தி, தன் எளிமையான வாழ்க்கை முறையால் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் சின்னமாக அவர் திகழ்கிறார். அரசியல் ரீதியாக காந்தியை அதிக அளவில் விமர்சனம் செய்த பெரியார்கூட, காந்தி இறந்தபோது விடுதலை நாளிதழிலில் அவரைப் பற்றி பெருமையாக தலையங்கம் எழுதியுள்ளது அகிம்சைக்கு கிடைத்த வெற்றி ஆகும். எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது. அவரை எந்தக் கட்சியுடனும் இணைத்துப் பார்க்கக் கூடாது. இந்தச் சமுதாயத்தின் நோயாக அரசியலும், மதமும் திகழ்கிறது
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
English Summary : Kamal Haasan said that no political party can claim Gandhi.