rain-24102015வங்காள விரிகுடா கடலில் காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை யொட்டி காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதியிலும் காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27ஆம் தேதிக்கு மேல் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தற்போது உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி வலுவடைந்து பருவமழை தொடங்குவதற்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20 முதல் 23-ம் தேதிகளில் வழக்கமாக தொடங்கும். பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவான சூறாவளி மற்றும் சில தட்பவெப்ப காரணங்களால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்குகிறது. தமிழகத்தில் கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் 8 செ.மீ., கன்னியா குமரி மாவட்டம் மயிலாடியில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 4 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 3 செ.மீ. மழை நேற்று முன் தினம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று காலையில் இருந்தே மேகமூட்டத்துடன் இருந்து மதியம் முதல் பரவலாக மழையும் பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்த நிலையில் இந்த மழை நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவும் என சென்னை மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வட கிழக்கிலிருந்து மேகக் கூட்டங்கள் வந்து கொண்டிருப்பதால் இந்த திடீர் மழை வந்துள்ளது. இந்த மழை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மேகக் கூட்டங்களின் வருகையை பொறுத்தே இந்த மழை நீடிக்கும். பருவமழை வருகிற 27 அல்லது 28ம் தேதிகளில் தொடங்கும்” என்று கூறினார்.English summary-North East Monsoon rains begins in Tamil Nadu ,Chennai Meteorological Centre has mentioned