சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரும் 16ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி சமீபத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பயிற்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,707 ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தேர்தல் நிர்வாகம், பயிற்சியில் கலந்து கொள்ளாத அனைவருக்கும் ஏன் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நகரத்தில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணிக்காக 23 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிய மாநகராட்சியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த வாரம் 16 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்கவில்லை. எனவே பயிற்சிக்கு வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள், அந்தந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, தங்களுக்கு தெரிந்த மற்றும் குடும்ப நபர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க உதவி கேட்டு வருகின்றனர். அவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன.
ஏற்கத்தகாத காரணங்களுடன் யாரேனும் தேர்தல் பணிக்கு விலக்கு கோரி வந்தாலோ, அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சிபாரிசு செய்தாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவச் சான்றுகளுடனும், திருமண அழைப்பிதழ்களுடனும், தேர்தல் பணி விலக்கு கோரி மாவட்ட தேர்தல் அலுவலகத்தை ஊழியர்கள் படையெடுப்பது அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் அவர்கள் கூறியபோது, முதல்கட்ட பயிற்சி யில் 2 ஆயிரத்து 707 ஊழியர்கள் பங்கேற்கவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மறு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
English Summary : Notices to 2,707 employees in Chennai to attend Election Training.