சென்னை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மெட்ரோ ரயில் சேவை, கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இருப்பினும், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 29ஆம் தேதி தமிழக முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான பயணச் சீட்டுகள் விற்பனையாகி உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான சென்னையின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஜூன் 29 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்ட நிலையில் முதல் நாளே 40 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். அன்று ஒரு நாளில் மட்டும் மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தச் சேவை ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய 7 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய பாதையில் முதல் கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும் பயணச் சீட்டு எடுப்பதைவிட ஸ்மார்ட் கார்டு பெறுவதையே பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில் நிலைய கவுன்ட்டர்களில் ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதில், தேவையான தொகையைச் செலுத்தி பற்று வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும்போது பயணத் தொகையில் 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. நேரடியாக பயணச் சீட்டு பெறுபவர்களுக்கு ரூ.10 என்றால், இவர்களுக்கு ரூ.9 மட்டுமே கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதேபோல பயணச் சீட்டை எடுக்கக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இந்த அட்டை ஓராண்டுக்குச் செல்லுபடியாகும் எனபதே ஆர்வத்துக்கான முக்கியக் காரணம்.பயணச் சீட்டு பெறுவதற்கென தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் விவரங்களைப் பதிவு செய்து, பணத்தைச் செலுத்தினால் பயணத்துக்கான டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
English Summary:One million tickets in a single week . Chennai Metro Rail Adventure