blindgirlsபார்வையற்ற பெண்கள் யாருடைய உதவியும் இன்றி சொந்தக்காலில் நிற்கவும், அவர்களுடைய வருமானத்தை அதிகப்படுத்தி கொள்ளும் நோக்கிலும், பல்வேறு சலுகைகளை தமிழக அரசும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் பார்வையற்ற பெண்கள் இலவசமாக கணினி பட்டயப் படிப்பு படிக்க தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சிறப்பு  ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பார்வையற்றோர் சங்க துணைத்தலைவர் இ.ராஜேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தில், பார்வையற்ற பெண்களுக்காக ஓராண்டு கால கணினி பட்டயப் படிப்பு நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இந்த படிப்பில் 15 பெண்கள் வரை சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சேர்க்கையின்போது, பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடல்நலனும் அவசியம். படிப்பு காலத்தில் விடுமுறையே எடுக்கக்கூடாது. தகுதியும் விருப்பமும் உடைய பார்வையற்ற பெண்கள் விண்ணப்ப படிவத்தை தண்டையார்பேட்டை ரெட்டைகுழி தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

படிப்புக்கு தேர்வு செய்யப்படுவோர் விவரம் ஜூலை 25-ந் தேதி அறிவிக்கப்படும். அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி இலவசம். மேலும், கைச்செலவுக்காக மாதந்தோறும் ரூ.200 வழங்கப்படும். கணினி பயிற்சியுடன் மென்திறன் பயிற்சி, ஹிந்தி பேச்சுப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 044-25956677, 25955170 ஆகிய தொலைபேசி எண்களை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த படிப்புக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தினம் ஜூலை 20 என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ராஜேஸ்வரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English Summary:Free computer diploma course for blind girls in Chennai