பல்வேறு காரணங்களினால், இரண்டாம் கட்ட ஜேஇஇ மெயின் 2023 விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிக்க தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16ம் (நாளை) தேதி நள்ளிரவு 10.50 மணி வரை விண்ணப்பபங்களை சமர்ப்பிப்பதற்கு மேலும் ஒரு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப கல்லூரி நுழைவு சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறையும் இந்த தேர்வை எழுதலாம். இரண்டு தேர்விலும் மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுகின்றனர்.
அந்த வகையில் 2023 கல்வியாண்டிற்கான முதற்கட்ட தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 12ம் தேதியுடன் முடிவுற்றது. இந்நிலையில், மாணவர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், தற்போது இறுதி வாய்ப்பை தேர்வு முகமை வழங்கியுயுள்ளது.
முக்கியமான நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது / சமர்ப்பிப்பது ஆகியவை இன்று முதல் 16ம் தேதி நள்ளிரவு 10.50 மணி வரையிலும் கட்டணம் செலுத்துவது நள்ளிரவு 11.50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். தேவையான விண்ணப்பக் கட்டணங்களை, கடன் அட்டை / சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை / யுபிஐ பேடிஎம் மூலமாக செலுத்தலாம்.
இது ஒருமுறை வாய்ப்பு என்றும், எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுவதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் 011- 40759000 மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in.