சில்லறை தட்டுப்பாட்டை போக்க 15 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்த உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து நேற்று மக்களவையில் எம்.பிக்கள் சிலர் இதுகுறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, “15 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், ஒரு ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் அச்சிடப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, ஆண்டுக்கு 15 கோடி அளவில் ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவைப்படும் காகிதங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும், இதற்காக, ஆண்டுக்கு 6,000 டன்கள் அளவுக்கு காகிதங்களைத் தயாரிக்கும் இயந்திரம் ஓஷங்காபாத்திலும், ஆண்டுக்கு 12,000 டன்கள் அளவுக்கு காகிதங்களைத் தயாரிக்கும் இரண்டு இயந்திரங்கள் மைசூரிலும் நிறுவப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது, ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்குத் தேவைப்படும் காகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரூபாய் நோட்டுக்களை அச்சிடத் தேவைப்படும் மை மட்டுமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

English Summary: One Rupee Note is coming again. No Fifteen Rupees Note, says Central Minister Jayanth Sinha.