சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும், தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், விடியோ மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவுட்சோர்சிங் முறையில் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பொது நிர்வாகம், பொருளாதாரவியல், வணிகவியல் என 3 இளநிலை மற்றும் 6 முதுநிலை படிப்புகளை ஆன்லைன் மூலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், முதல் கட்டமாக மூன்று படிப்புகளை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மூன்று ஆன்லைன் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், வகுப்புகள் போன்ற அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெறும் என்றும், மாணவர்கள் எங்கிருந்தும், இந்த ஆன்லைன் கல்வியை பெறலாம் என்றும் பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.