சென்னை : விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதற்காக தெரியுங்களா? அரசு சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் திறந்த நிலை இணையதள சேவை திட்டத்தில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என டி.என்.இ.ஜி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற டி.என்.இ.ஜி.ஏ., எனும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் தமிழ்நாடு அரசு கேபிள் ‘டிவி’ வழியாக அரசு ‘இ – சேவை’ மையத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இ – சேவை மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க ‘திறந்த நிலை சேவை தளம்’ திட்டம் கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக தினந்தோறும் பல ஆயிரம் பேர் பயன் அடைந்து வருகின்றனர்.
அரசு, இ – சேவையின் திறந்த நிலை சேவை தளம் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. முதல் துறையாக வருவாய் இணைக்கப்பட்டு வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் என 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் துவங்கிய போது குறைந்த அளவு மக்களே இதில் விண்ணப்பித் தனர். தற்போது மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.
நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இணையதள பரிவர்த்தனைகள் தற்போது நடைபெறுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் திறந்த நிலை சேவை தளம் வழியாக விண்ணப்பிக்கின்றனர். மக்களிடத்தில் இதற்கு வரவேற்பு கூடி வருகிறது. இதில் கூடுதலாக போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் போக்குவரத்து துறையின் லைசென்ஸ் புதுப்பிப்பு முகவரி மாற்றம் போன்ற பல சேவைகளும் விரைவில் இணைக்கப்பட உள்ளன.