உடுமலை; சென்னை ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதல் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த பல ஆயிரம் இளைஞர்கள், சென்னையில் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல், நவராத்திரி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போது ஊருக்கு வந்து செல்கின்றனர். குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்துக்கு ரயிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழநி வழியாக பாலக்காட்டிலிருந்து, சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்படு கிறது. இவ்வழித்தடத்தில் சென்னைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள்இடம் கிடைக்காமல் திணறுகின்றனர். சாதாரண நாட்களிலே கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பண்டிகை விடுமுறையில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகைக்கு விடுமுறை முடிந்து, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இந்நிலையில், சென்னை ரயிலில் நேற்று பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடம்பிடிக்க பயணிகள் தள்ளுமுள்ளுடன் ஏறினர். இடம் கிடைக்காமல் நின்று சென்றனர். இதனால், பொள்ளாச்சி, உடுமலை வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கினால் உபயோகமாக இருக்கும் என, பயணிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் விடுமுறை சமயங்களிலாவது இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.