பாரத பிரதமரின் கனவு திட்டங்களில் மிக முக்கியமானது ‘தூய்மை இந்தியா’ என்ற இந்தியா முழுவதையும் தூய்மைப்படுத்தும் திட்டம். கடந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்திய அஞ்சல்துறையும் தன் பங்கிற்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளது.
இதன்படி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ஸ்டாம்ப் ஒட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் பசைக்கு விடை கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக ஸ்டிக்கர் அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
கடிதங்களை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் சென்று வழங்குவதற்கான கட்டணத்தின் அடையாளமாக அஞ்சல் தலை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி அஞ்சல் தலையுடன் பலருக்கும் நெருக்கமான சினேகம் உண்டு. அஞ்சல் தலை சேமிப்பதை உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கடிதங்களில் 1854-ம் ஆண்டுமுதல் அஞ்சல் தலை பயன்படுத்தப்படுகிறது. இந்திய அஞ்சல் துறைக்கு தேவையான அஞ்சல் தலைகள், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள செக்யூரிட்டி அச்சகத்தில் அச்சடிக்கப்படுகின்றன.
அஞ்சல் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, பசையைக் கொண்டுதான் அஞ்சல் தலை ஒட்டப்பட்டு வரும் முறை கையாளப்படுகிறது. அஞ்சல் தலைகளில் பசைத்தன்மை சிறிது இருந்தபோதிலும், தண்ணீர் அல்லது பசையைக் கொண்டுதான் ஒட்டமுடியும். இதற்காக, அஞ்சல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக பசை வைக்கப்பட்டிருக்கும். அவரவர் இஷ்டத்துக்கு பசையை தடவுவதாலும், பசை தடவிய கையை அஞ்சலக சுவரிலேயே தடவுவதாலும் அஞ்சலகங்களில் ‘பசைப் பகுதி’ பெரும்பாலும் அசுத்தமாகவே இருக்கும். சிலர் எச்சில் தடவியும் அஞ்சல்தலையை ஒட்டுவது உண்டு.
இந்நிலையில், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை துறைரீதியாக செயல்படுத்தும் வகையில், ஸ்டிக்கர் அஞ்சல் தலைகளை வெளியிட இந்திய அஞ்சல் துறை தற்போது முடிவெடுத்துள்ளது. முதலில் ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல்தலை சேவைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அனைத்து அஞ்சல் தலைகளுமே ஸ்டிக்கர் மயமாக்கப்படும் என்று தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைவர் (வணிக மேம்பாடு) எஸ்.சி.பர்மா கூறியுள்ளார்.
English Summary: Paste postage instead striker postal stamp.new initiative for postal department