கார்த்தி, லட்சுமி மேனன் நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு இடைக்கால தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர். எனவே திட்டமிட்டபடி இன்று மாலை காட்சி முதல் ‘கொம்பன்’ படம் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

கொம்பன்’ படத்திற்கு தடை கேட்ட மனு இன்று பிற்பகல் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘கொம்பன் படத்தில் இருந்த ஆட்சேபகரமான காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே நீக்கிவிட்டுத்தான் தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. எனவே கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் இயக்குனர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, தணிக்கை வாரியம் படத்தை முழுமையாக பார்த்த பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளது. மனுதாரர் தரப்பினரோ, நீதிபதிகளோ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. கதை, கதாபாத்திரங்கள் கற்பனையானது என திரையிட்ட பிறகே படம் தொடங்குகிறது. எனவே படத்தை தடை செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என்று வாதாடினார்.

இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்து ‘கொம்பன்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த திரையுலகினர், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள ஆதரவாளர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.

English Summary : “Komban” film ready to release after dismiss of petition filed against the film.