pfrate17216வருங்கால வைப்பு நிதியாக ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டும் தொகைக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதனால் 5 கோடி ஊழியர்கள் பயனடைவார் என்று கூறப்படுகிறது.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது: “ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விகிதம் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 8.75 சதவீதமாக இருக்கும் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்ந்தப்பட்டு 8.80 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரு நிதி ஆண்டுகளாக 8.75 சதவீதமாக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. வட்டி உயர்த்தப்பட்டதன் மூலம் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள்’ என்று கூறினார்.

ஆனால் வருங்கால வைப்பு நிதியின் தொகைக்கு உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் குறித்து தொழிற்சங்கள் தங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பிஎப் அமைப்புக்கு 34,844 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் 9 சதவீத வட்டி கொடுத்தால் கூட உபரியாக 100 கோடி ரூபாய் பிஎப் அமைப்பிடம் இருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் கருத்து கூறியுள்ளன. இபிஎப்ஓ-வின் நிதி மற்றும் முதலீட்டுக் குழு முன்னதாக 8.95% வட்டி விகித உயர்வை பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது 8.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதே தொழிற்சங்கங்களின் அதிருப்திக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: PF interest rate hike to 0.05 percent. Trade unions are dissatisfied.