நிகழாண்டில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இனிப்பு, காரவகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட 225 வகையான பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.