சென்னை: பிளஸ் 1 தேர்ச்சி பெறாத, 23 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்காவிட்டாலும் பிளஸ் 2 தேர்வு எழுத சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 2017 – 18ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 தேர்வு அறிமுகமானது; புதிய தேர்வு முறையும் அமலுக்கு வந்தது. இதனால் 2018ல் நடந்த தேர்வில் பிளஸ் 1 பாடத்தில் தேர்ச்சி பெறாத 23 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2வை தொடராமல் பள்ளிகளில் இருந்து வெளியேறினர்.
இவர்கள் பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாவிட்டாலும் அதை அரியராக எழுதவும் பள்ளிகளுக்கு வந்து பிளஸ் 2 படிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இன்றியும் கட்டாயமாக மாற்று சான்றிதழ் கொடுத்தும் வெளியேற்றப் பட்டனர். இதை அரசு தேர்வு துறை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
அதேபோல தேர்வு கட்டணம் வசூலிக்கவும் மாற்று சான்றிதழ்களை எடுத்து வரவும் அறிவுறுத்தியது. இந்த அறிவிப்பால் 50 சதவீதம் பேர் வரை பள்ளிகளுக்கு திரும்பினர். ஆனால் பள்ளிக்கு வராமலும் கட்டணம் செலுத்தாமலும் விண்ணப்பிக்காமலும் இருந்த மற்ற மாணவர்களும் தேர்வு எழுத தேர்வு துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த மாணவர்கள் எந்த தேர்வு மையத்தில் ஏற்கனவே தேர்வு எழுதினார்களோ அதே தேர்வு மையத்தில் அவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. தகவல் பலகையிலும் அவர்களின் பழைய தேர்வு எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு தங்களுடன் படித்து தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களிடம் தேர்வு மையத்தை கேட்டும் பழைய மாணவர்கள் தேர்வு எழுதலாம். ‘இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் நாட்களில் கூட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டாம். நேரடியாக தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதலாம்’ என தலைமை ஆசிரியர்கள் கூறினர்.