12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கு.தேவராஜன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்குரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இதற்கென தனி விண்ணப்பங்கள் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 தேர்வு கட்டணமாகவும், அத்துடன் இதர கட்டணமாக ரூ.35ம், பதிவுக்கட்டணமாக ரூ.50ம் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.