தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணி செய்யும் ஊழியர்கள் முந்தைய நாள் இரவே தங்கியிருந்து வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. எனவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தங்கும்செய்து தர வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:
சட்டசபை தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் முதல் நாளே வாக்குச்சாவடிக்கு சென்று இரவில் அங்கேயே தங்கி இருந்து வாக்குப்பதிவுக்கான முன்ஏற்பாடுகளை செய்ய வேண்டி உள்ளது.
ஆனால் வாக்குச்சாவடிகளில் கழிப்பறை உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் காலைக் கடன்களை முடிப்பதற்கும், குளிப்பதற்கும் பெரிதும் அவதிப்பட நேரிடுகிறது. குறிப்பாக பெண் அலுவலர்கள் ஏராளமான சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. பல இடங்களில் டீ, காபி, உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய செல்லும் ஊழியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே ஊதியம் மற்றும்படிகள் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். இதை உயர்த்தி வழங்க வேண்டும். எனவே தேர்தல் கமிஷன் தேவையான நடவடிக்கை களை எடுத்து வசதிகளை செய்து தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
English Summary: Polling Booth Officers Need Restroom facility, Petition to Election Commission.