மூன்று பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 26 ஆம் தேதி மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு 9 வங்கி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வங்கி சேவைகள் பாதிப்படைந்தன. வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து 4வது சனிக்கிழமை விடுமுறை, இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 வங்கி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (டிச.26) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் பத்து இலட்சம் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் புதன்கிழமையும் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும்.
இதையடுத்து நாளை திங்கட்கிழமை மட்டும் வங்கி வேலை நாளாகும். அடுத்த நாள் செவ்வாக்கிழமை கிறிஸ்மஸ் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. அடுத்த நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.