திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். திருமலையில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50, ரூ.300 கட்டண தரிசனம் நடைமுறையில் உள்ளது. கட்டண தரிசனத்துக்கு நாடு முழுவதும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுவிர இணைய தளங்களில் ‘ஆன்லைன்’ மூலம் கட்டண தரிசனம் முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும்போது புகைப்படம் மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை அதில் இணைக்க வேண்டும். அதன் பிறகு நமக்கு நேரம், நாள் முதலியவை ஒதுக்கப்படும். அதை நாம் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொண்டு தரிசனத்துக்கு செல்லும்போது காண்பிக்க வேண்டும்.
ஆனால் தகவல் மையங்களில் நேரில் முன்பதிவு செய்யும்போது இதுவரை அடையாள அட்டை தேவையில்லாமல் இருந்தது. தற்போது நேரில் முன்பதிவு செய்யவும் அடையாள அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் நேரில் வந்து அனைவரது அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒருவர் 5 பேருக்கு முன்பதிவு செய்யலாம். ஆனால் இதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படாததால் முன்பதிவு செய்ய செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல மையத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இதுவரை அடையாள அட்டை கேட்கப்படாத நிலையில் நேற்று திடீரென பக்தர்களிடம் அடையாள அட்டை வேண்டும் என கண்டிப்பாக தேவஸ்தான அதிகாரிகள் கேட்டதால் முன்பதிவு செய்ய வந்த பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தேவஸ்தான ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டதால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்பதிவுக்கு அடையாள அட்டை அவசியம் என்று குறிப்பு தேவஸ்தான தகவல் பலகையில் கூட இல்லாத நிலையில் அதிகாரிகள் அடையாள அட்டை கேட்பது பொருத்தமற்றது என பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு குடும்பத்துடன் முன்பதிவு செய்ய வந்தவர்களும் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றதுடன் திரும்பினார்கள்.
மேலும் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி தற்போது 30 நாட்களாக குறைக்கப்பட்டு இருப்பதாக சென்னை தகவல் மைய முன்பதிவு ஊழியர்கள் தெரிவித்ததுடன் செப்டம்பர் மாதத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அக்டோபர் மாத தரிசனத்துக்கு முன்பதிவு இல்லை என்றும் கூறி மறுத்து விட்டனர். இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.
திருமலையில் அடிக்கடி தரிசன முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அறைகளில் அடைக்கும் முறை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நீண்ட கியூ முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தெரியாமலும் பக்தர்கள் கால்கடுக்க நடந்து அவதிப்படுகிறார்கள். திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம் செய்யும் போது அதை தகவல் மையங்கள் மூலம் அந்தந்த பகுதியில் அறிவித்தால்தான் பக்தர்கள் சிரமப்படுவது தவிர்க்கப்படும். தமிழகத்தில் இருந்து ஏழை எளியவர்கள் அதிகம் பேர் திருப்பதி செல்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற நடைமுறைகள் தெரியாமல் அவதிப்படும் நிலை ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
English Summary : Devotees starts a quarrel in T.Nagar TTD office when officials ordered to submit ID proof for booking without any intimation or announcement.