கர்நாடக சட்டபேரவை தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்க, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த தேர்தலை விட வாக்குப் பதிவை அதிகரிக்கவும் முறைகேடுகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்பட விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தேர்தல் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே பெங்களூரு போக்குவரத்து போலீஸாருக்கும் புகை தடுப்பு கழகத்துக்கும் பிரச்சார தூதராக இருக்கிறார். கன்னட இசையமைப்பாளர் யோகராஜ் பட் உருவாக்கும் வீடியோவில் ராகுல் டிராவிட் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட்டு, ஒளிப்பரப்பப்படும். இந்த வீடியோவில் ராகுல் டிராவிட், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும், முறைகேடுகளை தடுப்பது தொடர்பாகவும் கருத்துகளை தெரிவிப்பார் என்றார்.
English Summary: Rahul Dravid appointed Karnataka election ambassador: Chief Electoral Officer.