சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு முதல் அண்ணா நகர் இடையே மெட்ரோ ரயிலுக்காக பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாதையில் தோண்டப்பட்ட சுரங்கப் பாதையில் 85 டன் எடையுள்ள ரயில் இன்ஜினை அதிகாரிகள் முதல்முறையாக கொண்டு சென்று நாளை ஆய்வு நடத்த உள்ளனர்.
சென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கப் பாதையும், 21 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாதையும் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் 5 கட்டமாக நடந்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை மொத்தம் உள்ள 8 கி.மீ. தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது ரயில் பாதைகள், சிக்னல்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.
இதில், கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர் டவர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வந்தோம். முதல்முறையாக நாளை சுரங்கப் பாதைக்குள் 85 டன் எடையுள்ள ரயில் இன்ஜினை கொண்டு சென்று ஆய்வு நடத்த உள்ளோம். ரயில் பாதை, சிக்னல் பணி, பாதுகாப்பு அம்சங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். இதில் ஏதேனும் குறைகள், திருத்தங்கள் கண்டறியப்பட்டால், அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.
சின்னமலை – ஆலந்தூர் – பரங்கிமலை இடையே உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சிக்னல் இயக்கம், ரயில் நிலையங்களில் ஆய்வு ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் ரயில் இன்ஜின் மூலம் இன்று ஆய்வு நடத்த உள்ளோம். இங்கு இன்னும் 10 நாட்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.
English summary – CMRL to use 85 tons Rail engine to check tunneling work.